விருத்தாசலம் அருகே திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் மர்ம சாவு போலீஸ் விசாரணை
விருத்தாசலம் அருகே திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பார்த்தீபன். இவர் வெளிநாட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவபிரியா(வயது 26). இவர்களுக்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி திருமணம் நடைபெற்றது. கணவரின் வீட்டில் இருந்த சிவபிரியா, நேற்று முன்தினம் அங்கு தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிவபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், புதுகூரைப்பேட்டையை சேர்ந்த சிவபிரியாவின் தந்தை ஜோதி போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகள் திருமணத்தின் போது, 7 பவுன் நகை, 2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள், 70 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை சீர் வரிசையாக கொடுத்தேன்.
ஆனால் பார்த்தீபன், அவரது தாய் கவுரி, அவரது சகோதரிகள் பானுமதி, நளினி ஆகிய 4 பேரும் சேர்ந்து உன் தந்தையிடம் சென்று கூடுதல் வரதட்சணையாக 25 பவுன் நகை, ரூபாய் 5 லட்சம் வாங்கி வருமாறு கூறி சிவபிரியாவை கொடுமை படுத்தியுள்ளனர். இதுகுறித்து சிவபிரியா என்னிடம் தெரிவித்தார். அப்போது வளைகாப்பு விழா நடந்தால், அப்போது சீர்வரிசை செய்கிறேன் என்று தெரிவித்தேன்.
இந்த சூழ்நிலையில் என்னுடைய மகள் இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. நான் சென்று பார்த்த போது அவரது வீட்டில் யாரும் இல்லை. எனது மகள் உடல் மட்டும் தரையில் கிடந்தது. மேலும் எனது மகள் மீது காயம் இருந்தது, அதோடு அவர் அணிந்திருந்த உடையும் கிழிந்த நிலையில் இருந்தது. எனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை.
ஆகையால் எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. அவரது இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்த் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் மர்மமான முறையில் இறந்து இருப்பது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story