நாடாளுமன்ற தேர்தலில் போலீசார் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவு
நாடாளுமன்ற தேர்தலில் போலீசார் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்,
நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆயுதப்படை போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்து கொண்டு போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அந்த விதிகளை நீங்கள் நன்றாக தெரிந்து கொண்டு, அதன்படி நடக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு, தேர்தல் நாள் அன்று, தேர்தலுக்கு பிறகு என 3 வகையான பாதுகாப்பு பணியை நீங்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி செய்து முடிக்க வேண்டும்.
தேர்தல் பணி காலத்தில் போலீசாரால் எவ்வித பிரச்சினையும் வராமல் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். அலுவலுக்கு மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் போலீசார் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு சலுகை காட்டக்கூடாது. பிரச்சினை நடக்கும் இடங்களில் உங்களை பாதுகாக்க நடக்கும் நிகழ்வுகளை வீடியோ எடுப்பது நல்லது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நிருபர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் 288 பேரிடம் அந்தந்த போலீஸ் நிலையங்களில் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவிட்டு இருந்தோம். அதன்படி 250 பேர் துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்து விட்டனர். 38 பேர் வங்கி பாதுகாப்பு போன்ற பணிக்காக சிறப்பு அனுமதி பெற்று துப்பாக்கிளை வைத்துள்ளனர்.
163 பதற்றமான வாக்குச்சாவடிகள், 4 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்து வருகிறோம். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டத்துக்கு 780 துணை ராணுவ படை வீரர்களை பாதுகாப்பு பணிக்கு கேட்டு இருக்கிறோம். அதில் 380 பேர் முதல் கட்டமாக மாவட்டத்துக்கு விரைவில் வர இருக்கின்றனர். தனியார் நிகழ்ச்சிகளிலும் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story