திண்டிவனம் அருகே, மினிலாரியில் கடத்திய 2,400 மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது


திண்டிவனம் அருகே, மினிலாரியில் கடத்திய 2,400 மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 March 2019 10:45 PM GMT (Updated: 17 March 2019 11:57 PM GMT)

திண்டிவனம் அருகே மினிலாரியில் கடத்திய 2,400 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த கொஞ்சிமங்கலம் பெருமாள் கோவில் அருகே கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமேனி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக விறகு ஏற்றி வந்த ஒரு மினிலாரியை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது விறகு கட்டைகளுக்கு அடியில் 50 அட்டை பெட்டிகளில் 2,400 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் மினிலாரியில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் உஷாரான போலீசார் தப்பி ஓடிய 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் செஞ்சி சிறுகடம்பூரை சேர்ந்த செந்தாமரைக்கண்ணன் மகன் விநாயகமூர்த்தி(வயது 25), வானூர் கோரைக்கேணியை சேர்ந்த நாராயணசாமி மகன் சேகர்(26) ஆகியோர் என்பதும், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தொண்டர்களுக்கு வழங்குவதற்காக புதுச்சேரியில் இருந்து செஞ்சிக்கு நூதன முறையில் மினிலாரியில் விறகு கட்டைகளுக்கு அடியில் மதுபாட்டில்களை கடத்திச் வந்தபோது பிடிபட்டதும் தெரியவந்தது. மதுபாட்டில்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரியின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து மதுபாட்டில்களை கடத்திய விநாயகமூர்த்தி, சேகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் அதனை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட மினிலாரியையும் போலீசார் பறிமுதல் செய்து திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் மினிலாரியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார். 

Next Story