வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2¾ லட்சம் மோசடி செய்தவர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2¾ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்துள்ள கீழப்பூங்குடியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 32). இவர் வெளிநாட்டில் வேலைக்கு போக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த காட்டுவா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த நாச்சியப்பன் (36) மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் தாங்கள் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி வந்தனர்.
இதை அறிந்த கதிர்வேல், 2 பேரிடமும் வெளிநாட்டில் வேலை வாங்கி தர கூறினாராம். இதையடுத்து அவர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய கதிர்வேல் கடந்த ஆண்டு ரூ.2¾ லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.
அதைத்தொடர்ந்து பணத்தை பெற்றுக் கொண்ட 2 பேரும், வெகுநாட்கள் ஆகியும் வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பாமல் இருந்தனராம். இதுகுறித்து கேட்ட போது, முறையாக பதில் கூறாமலும், பணத்தை திருப்பி தர கேட்ட போது, அதை கொடுக்காமலும் இருந்து வந்தனராம். அதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கதிர்வேல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தார்.
அவரது உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி விசாரணை நடத்தினார். மேலும் நாச்சியப்பன், முத்துக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, நாச்சியப்பனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story