மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் மலர்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18–ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 1,472 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 126 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பதற்றமானவை என்று கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வின்போது வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள், வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்ட வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், அமைதியான வாக்குப்பதிவுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவரங்களை கலெக்டர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.