நாகர்கோவில் அருகே காரில் சென்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை


நாகர்கோவில் அருகே காரில் சென்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம்  பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 March 2019 11:00 PM GMT (Updated: 18 March 2019 2:42 PM GMT)

நாகர்கோவில் அருகே காரில் சென்ற பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சத்தை தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவில்,

நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதி கடந்த 10–ந் தேதி மாலை அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படவும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கவும், தேர்தலை முறையாக நடத்தவும் குமரி மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக குமரி மாவட்டத்தில் மொத்தம் 18 பறக்கும் படைகளும், 18 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சரியான ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ.12 லட்சமும், 11 மிக்சி உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று காலை நாகர்கோவில் சட்டசபை தொகுதி நிலையான கண்காணிப்புக்குழு துணை தாசில்தார் சரஸ்வதி தலைமையில், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஐசக் நியூட்டன், ஏட்டுகள் ராஜேஷ்குமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நாகர்கோவில் அருகே பருத்திவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார். காரை வழிமறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.1 லட்சம் இருந்தது  தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண், “தான் நாகர்கோவிலில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருவதாகவும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பணத்தை எடுத்துச் செல்வதாகவும்’’ கூறினார்.

அதிகாரிகள் அதற்கான ஆவணங்களை காட்டுமாறு கூறினர். ஆனால் அந்த பெண்ணிடம் ஆவணம் எதுவும் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.பின்னர் அந்த பணத்துக்கான ஆவணங்களை கொண்டு வந்து கொடுத்து பணத்தை பெற்று செல்லுமாறு கூறி அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.

பிறகு அதிகாரிகள் அந்த பணத்தை அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமாரிடம் ஒப்படைத்தனர். அவர் அதை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Next Story