ஊத்தங்கரை அருகே முதியவரை அடித்துக் கொன்ற வழக்கில் 2 பேர் கைது


ஊத்தங்கரை அருகே முதியவரை அடித்துக் கொன்ற வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 March 2019 4:00 AM IST (Updated: 18 March 2019 10:09 PM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே முதியவரை அடித்துக் கொன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மிட்டப்பள்ளி பக்கமுள்ள ஓபகா வலசை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 60). இவரது மனைவி மங்கம்மாள் (54). இவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை மாந்தோப்பில் காவலுக்கு இருந்தனர்.

அப்போது மாங்காய் திருட வந்த 3 பேரை வெங்கட்ராமன் பிடிக்க முயன்றார். அவர்கள் வெங்கட்ராமனையும், அவரது மனைவி மங்கம்மாளையும் தாக்கினார்கள். இதில் வெங்கட்ராமன் இறந்தார். மங்கம்மாள் படுகாயம் அடைந்தார். இது குறித்து மங்கம்மாள் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

அதில் கள்ளிப்பட்டியை சேர்ந்த மாதையன் (40) உள்பட 3 பேர் தனது தோட்டத்தில் மாங்காய் திருடினார்கள். அவர்களை பிடிக்க முயன்றபோது தனது கணவர் வெங்கட்ராமனை அடித்து கொன்றுவிட்டார்கள். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிங்காரப்பேட்டை தளபதி நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (40), பொம்மதாசம்பட்டி கார்த்திகேயன் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த மாதையன் (40) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story