தையல் இல்லாத நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை கிருஷ்ணகிரி அரசு டாக்டர்கள் சாதனை
தையல் இல்லாத நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை செய்து கிருஷ்ணகிரி அரசு டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 56). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீராத கால் குடைச்சல், இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி கடும் வலி ஏற்பட்ட அவர் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
எலும்பு முறிவு, தண்டு வட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தனசேகரன், அவரை பரிசோதனை செய்தார். அதில் அவரது முதுகு தண்டு வடத்தில் ஜவ்வு பகுதி பிதுங்கி, 2 கால்களின் நரம்பு பகுதியில் அழுத்தம் ஏற்பட்டதால் தீராத வலியால் அவர் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் உதவியுடன் எம்.ஆர்.ஐ. பரிசோதனை செய்ததில், இந்த பிரச்சினை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பரமசிவம், மயக்கவியல் நிபுணர் டாக்டர் பிச்சைதிருமலை மற்றும் எலும்பு முறிவு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தனசேகரன் ஆகியோர், அந்த பெண்ணுக்கு நவீன முறையில் தழும்பு, ரத்த போக்கு இல்லாமல், குறுகிய காலத்தில் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்லும் வகையில் தையல் இல்லாத நுண்துளை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வலியால் அவதிப்பட்டு வந்த சின்னபொண்ணுவிற்கு இந்த நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் முதல் முறையாக அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும். நோயாளியிடம் பேசிக்கொண்டு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்திருந்தால் ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை செலவாகியிருக்கும்.
இது போன்ற வசதிகள் தற்போது கிருஷ்ணகிரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ளதால் இலவசமாகவே இந்த சிகிச்சையை செய்து கொள்ளலாம். எனவே, முதுகு தண்டு வடத்தில் வலி உள்ளவர்கள் உடனடியாக இந்த சிகிச்சை பெற்றுக்கொள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story