பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து 1,000 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து 1,000 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 18 March 2019 11:15 PM GMT (Updated: 18 March 2019 5:01 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்தும், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,000 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல், 

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் முதலில் புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

எனவே அவரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும், இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்க கோரியும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும் நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி என அனைத்து பகுதிகளிலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்டம் முழுவதும் சுமார் 1,000 வக்கீல்கள் கலந்து கொண்டதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story