இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடுகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குவதால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சேலம்,
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட கலெக்டர் ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்துக்குள் ஆங்காங்கே தடுப்பு கம்பிகளை போலீசார் வைத்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய வாகனங்களில் வருபவர்கள் 100 மீட்டருக்கு முன்பாக அவற்றை நிறுத்தும் வகையில் சாலையில் எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கலையொட்டி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்களை போலீசாரின் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும் போது, ‘சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்து உள்ளோம். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பன உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன‘ என்றார். இது தவிர தேர்தல் விதி மீறல்கள் நடக்கிறதா? என்பதை தனிக் குழுவினர் கண்காணிக்கின்றனர்.
Related Tags :
Next Story