காடையாம்பட்டி, இடங்கணசாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை


காடையாம்பட்டி, இடங்கணசாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 March 2019 3:00 AM IST (Updated: 18 March 2019 10:43 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், இடங்கணசாலை பேரூராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஓமலூர், 

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கூ.குட்டப்பட்டி மோளகரட்டூரில் 200-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் ஆழ்துளை குழாய் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இதுபற்றி காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பின்னரும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே பொதுமக்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். அங்கும் போதிய தண்ணீர் இல்லாததால் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இந்தநிலையில் அந்த பகுதி பெண்கள் திரண்டு நேற்று காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அங்கிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குமரேசனிடம் புகார் மனு கொடுத்தனர். அப்போது அவர், தேர்தல் நேரம் என்பதால் புதிதாக குடிநீர் குழாய் அமைக்க அனுமதியில்லை. எனவே கூடுதலாக மேட்டூர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதி அளித்தார். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு கொசவப்பட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து கிழக்கே தொடக்கப்பள்ளி வரை 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிக்கு சித்தர் கோவில் பகுதியில் இருந்து குடிநீர் வந்தது. அந்த தண்ணீரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருவதில்லை. இப்பகுதியை சேர்த்த பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக தினமும் அரை கிலோ மீட்டர் சென்று தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து கடந்த வாரம் அப்பகுதி பொதுமக்கள் இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலரிடம் குடிநீர் வசதி செய்து தர வேண்டி மனு கொடுத்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை கொசவப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் இடங்கணசாலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, கோடை காலம் நெருங்கி விட்டதால் குடிநீர் இன்றி சிரமப்படுகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரனிடம் மனு அளித்தனர். அதனை பெற்று கொண்ட செயல் அலுவலர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story