தூத்துக்குடியில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் நடந்தது


தூத்துக்குடியில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 18 March 2019 11:00 PM GMT (Updated: 18 March 2019 5:33 PM GMT)

தூத்துக்குடியில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் நேற்று நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் (பயிற்சி) அனு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வருவாய் அலுவலர் வீரப்பன் பேசியதாவது:-

தூத்துக்குடி தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட தேர்தல் அலுவலர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட உதவி தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்பட்ட ஒரு நபர் முன்மொழிய வேண்டும். மற்ற வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்பட்ட தலா 10 பேர் முன்மொழிய வேண்டும்.

வேட்பு மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 26-ந் தேதி வரை (விடுமுறை தினத்தை தவிர) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் அறைக்குள் வேட்பாளருடன் 4 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.25 வைப்புத்தொகை செலுத்த வேண்டும். வேட்பாளர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினராக இருந்தால் வைப்புத்தொகை ரூ.12 ஆயிரத்து 500 உடன் உரிய சாதி சான்றிதழ் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும்.

போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் பிரமாண பத்திரம் (அபிடவிட்) தாக்கல் செய்ய வேண்டும். பிரமாண பத்திரங்களில் பொய்யான தகவல்களை அளிக்க கூடாது. கேட்கப்பட்ட தகவல்களை தருவதற்கு வேட்பாளர்கள் ஒருபோதும் மறுக்கக்கூடாது. வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடந்து கொள்ள உறுதிமொழி ஒன்றை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

வேட்பாளர்கள் அனைவரும் தாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்தினம் ஏதேனும் ஒரு வங்கியில் தேர்தலுக்காக தனியாக வங்கி கணக்கு ஒன்றை தொடங்கி அதன் நகலுடன் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் தொடர்பான அனைத்து வரவு செலவு கணக்கு விவரங்களையும் கண்டிப்பாக அந்த வங்கி கணக்கு மூலமாக தான் செய்யப்பட வேண்டும். இந்த வங்கி கணக்கை வேட்பாளர்கள் தங்கள் பெயரிலோ அல்லது தங்களால் நியமனம் செய்யப்பட உள்ள தேர்தல் முகவரை கூட்டாக சேர்த்தோ தொடங்கலாம்.

வேட்பாளர்கள் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தங்கள் செலவு கணக்குகளை தேர்தல் கணக்கு அலுவலர்களிடம் தணிக்கைக்கு தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 தினங்களுக்குள் மேற்படி கணக்குகளையும் அவற்றிற்கு உரிய பில்களையும், வேட்பாளர்கள் கையொப்பமிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்தால் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தேர்தல் பிரிவு தனி தாசில்தார் நம்பிராயர், தாசில்தார் நாகராஜன், அ.தி.மு.க. சந்தனம், சகாயம், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கிருபாகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா, பா.ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் சிவராமன், ம.தி.மு.க. முருகபூபதி, மகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி அகமது இக்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story