கயத்தாறு அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம் ‘அடிப்படை வசதிகள் செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்’


கயத்தாறு அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம் ‘அடிப்படை வசதிகள் செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்’
x
தினத்தந்தி 18 March 2019 10:30 PM GMT (Updated: 18 March 2019 6:15 PM GMT)

கயத்தாறு அருகே அடிப்படை வசதிகள் செய்ய கோரி கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கயத்தாறு, 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி கீழ காலனியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர், சாலை, தெருவிளக்கு, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே அங்கு அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, அப்பகுதி மக்கள் நேற்று தங்களது வீடுகள், தெருக்களில் கருப்பு கொடி ஏற்றினர்.

பின்னர் அவர்கள், அங்குள்ள அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சிலர், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் சென்று கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவை பெற்று கொண்ட தாசில்தார் பரமசிவன், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்குள் அடிப்படை வசதி செய்து தர வேண்டும். இல்லையெனில் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Next Story