தென்காசி நகரசபை அலுவலகத்தை பெண்கள் முற்றுகை “அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்”
அடிப்படை வசதிகள் செய்துதர கோரி தென்காசி நகரசபை அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி,
தென்காசி 10-வது வார்டு பாறையடி தெருவில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கழிவுநீர் ஓடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் நேற்று காலை தென்காசி நகரசபை அலுவலகத்திற்கு தங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நகரசபை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அவ்வாறு செய்து தரவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.
உடனே அலுவலர்கள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் கோரிக்கை மனுவை நகரசபை அலுவலகத்தில் அளித்துவிட்டு, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story