மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.17 லட்சம் பறிமுதல் ஹவாலா பணமா? அதிகாரிகள் விசாரணை


மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.17 லட்சம் பறிமுதல் ஹவாலா பணமா? அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 19 March 2019 4:30 AM IST (Updated: 19 March 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.17½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணம் ஹவாலா பணமா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்தர்வகோட்டை,

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று காலையில் கந்தர்வகோட்டை அருகே உள்ள வாண்டையான்பட்டி விளக்குரோட்டில் உள்ள கந்தர்வகோட்டை - செங்கிப்பட்டி சாலையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி சங்கரலட்சுமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சியில் இருந்து செங்கிப்பட்டி வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவரை சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த ஒரு பையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.17 லட்சத்து 47 ஆயிரத்து 800 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர் கந்தர்வகோட்டை அருகே உள்ள வீரடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரெத்தினம் மகன் அய்யப்பன் (வயது 21) என்பது தெரியவந்தது. தொடர்ந்து பறக்கும் படையினர் கேட்ட கேள்விகளுக்கு அய்யப்பன் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

இதனால் சந்தேகமடைந்த பறக்கும் படையினர் அய்யப்பனையும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்து, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரியும், தேர்தல் அதிகாரியுமான சசிகலா, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கலைமணி ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி சசிகலா, அய்யப்பனிடம் நடத்திய விசாரணையில், இந்த பணம் சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும், இந்த பணத்தை தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் பகுதியில் பட்டுவாடா செய்ய இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாத இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அய்யப்பனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story