விழுப்புரம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


விழுப்புரம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 18 March 2019 11:00 PM GMT (Updated: 18 March 2019 7:17 PM GMT)

விழுப்புரம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை தாலுகா மங்களம்புதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் கணபதி (வயது 40). இவர் தனது மனைவி சிவகாமியுடன் (35) மும்பையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மகள்கள் இருவரும் மங்களம்புதூரில் உள்ள சிவகாமியின் தாய் வீட்டில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். கணபதியும், சிவகாமியும் 6 மாதத்திற்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மகள்களை பார்க்க சொந்த ஊருக்கு வருவதற்காக நேற்று முன்தினம் மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் விருத்தாசலத்திற்கு பயணச்சீட்டு எடுத்து கணபதியும், சிவகாமியும் பயணம் செய்தனர்.

இந்த ரெயில் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் என்ற இடத்தில் வரும்போது கணபதி, ரெயிலில் உள்ள கழிவறைக்கு சென்றுவிட்டு தனது இருக்கையில் அமர நடந்து வந்தார். அப்போது படிக்கட்டின் கைப்பிடியை பிடிக்கும்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த கணபதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜூலியட்ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story