ஆண்டிப்பட்டி அருகே அனுமதியின்றி மதுபான விற்பனை அமோகம் - நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தல்


ஆண்டிப்பட்டி அருகே அனுமதியின்றி மதுபான விற்பனை அமோகம் - நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 March 2019 4:15 AM IST (Updated: 19 March 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கராம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், கிராம மக்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் மனு கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அதிகாரிகள் மனுக்களை நேரடியாக வாங்க மாட்டார்கள் என்றும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மனுக்கள் பெறும் பெட்டிக்குள் மனுவை போட வேண்டும் என்றும் மக்களிடம் போலீசார் அறிவுறுத்தினர். மேலும், கிராம மக்கள் மொத்தமாக கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்லக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து கிராம மக்களில் சிலர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனுக்களை பெறும் பெட்டிக்குள் மனுவை போட்டனர்.

இதுகுறித்து மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் கேட்டபோது, ‘ரெங்கராம்பட்டி காளியம்மன் கோவில் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த கோவில் அருகில் அனுமதியின்றி மதுபான விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதனால், பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களுக்கும், மாணவிகளுக்கும், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

மேலும் எங்கள் ஊரில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படுவதால் கோவில் திருவிழாவில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மதுவிற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அனுமதியின்றி மதுவிற்பனை செய்வதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்றனர்.


Next Story