பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து வக்கீல்கள்-பெண்கள் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து வக்கீல்கள்-பெண்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 March 2019 11:15 PM GMT (Updated: 18 March 2019 9:42 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து வக்கீல்கள், பெண்கள் தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி,

பொள்ளாச்சியில் பெண்கள், மாணவிகளை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்து தேனி வக்கீல்கள் நேற்று கோர்ட்டை புறக்கணித்தனர். மேலும் தேனி லட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல்கள் சங்க தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் தேனி வக்கீல்கள், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், வழக்கை விரைந்து முடித்து சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் தேனி பங்களாமேட்டில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் கோமதி தலைமை தாங்கினார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் வெண்மணி, பெண்கள் விடுதலை கழக பொதுச்செயலாளர் தமிழரசி, அகில இந்திய பெண்கள் கலாசார இயக்க மாவட்ட செயலாளர் ராதிகா மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


Next Story