கொடுங்கையூரில் வீடு புகுந்து கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு


கொடுங்கையூரில் வீடு புகுந்து கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 19 March 2019 4:15 AM IST (Updated: 19 March 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

கொடுங்கையூரில், வீடு புகுந்து கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் மீனாட்சி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 57). இவருடைய மனைவி இதயவேணி (54). இவர்களுடைய மகள் நித்ய பிரியா(35). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

இவருடைய கணவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு நித்ய பிரியா, தனது 2 மகன்களுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை மோட்டார்சைக்கிளில் மகேந்திரன் வீட்டுக்கு வந்த 3 பேர், இதயவேணியிடம் நித்யபிரியா எங்கே? என விசாரித்தனர். அதற்கு அவர், அவள் வேலைக்கு சென்று இருப்பதாக கூறியதும், அவர் வந்தவுடன் வருவதாக இதயவேணியை மிரட்டிவிட்டு 3 பேரும் சென்றுவிட்டனர்.

இதனால் பயந்துபோன மகேந்திரன், இதுபற்றி கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். அதுபற்றி விசாரிப்பதாக கூறி அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அதே கும்பல் மீண்டும் இரவில் மகேந்திரன் வீட்டுக்குள் புகுந்து நித்ய பிரியாவை தேடினர். ஆனால் அவர் வீட்டில் இல்லாததால் ஆத்திரத்தில் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் மகேந்திரனின் காலிலும், அவருடைய மனைவி இதயவேணியின் தலையிலும் வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கொடுங்கையூர் போலீசார், படுகாயம் அடைந்த கணவன்-மனைவி இருவரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பிச்சென்ற மர்மநபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால்தான் எதற்காக அவர்கள் நித்ய பிரியாவை தேடி வந்தனர்? என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story