திருப்போரூர் பகுதியில் பெண்களிடம் வழிப்பறி; 2 வாலிபர்கள் கைது 27 பவுன் நகை பறிமுதல்


திருப்போரூர் பகுதியில் பெண்களிடம் வழிப்பறி; 2 வாலிபர்கள் கைது 27 பவுன் நகை பறிமுதல்
x
தினத்தந்தி 19 March 2019 4:00 AM IST (Updated: 19 March 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் பகுதியில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 27 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் பகுதியை சுற்றி உள்ள புதுப்பாக்கம், படூர், கோவளம், தையூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி, வாகன திருட்டு, வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து, மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் பாண்டியன் தலைமையில் 2 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 28), சதீஷ் என்ற ராஜி (21) ஆகியோரை பிடித்து கேளம்பாக்கம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இவர்கள் மீது மறைமலைநகர், செங்கல்பட்டு, படாளம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் இருந்ததாக தெரிகிறது. இவர்கள் கேளம்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் நகைபறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதில் வழிப்பறியில் ஈடுபட்டு பெண்களிடம் பறிக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டனர். இருவரிடமிருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story