கோபி, பெருந்துறை பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3¾ லட்சம் பறிமுதல்
கோபி, பெருந்துறை பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என கண்டுபிடிக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் அதிகாரிகள் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சத்தி–கோபி ரோட்டில் கோபி கொடிவேரி அணை பிரிவில் பறக்கும் படை அதிகாரி பவானி மற்றும் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையத்தை சேர்ந்த விவசாயியான நரேந்திரன் என்பது தெரியவந்தது.
மேலும் நடத்திய விசாரணையில், நிலத்தை கிரையம் செய்வதற்காக சத்தியமங்கலம் சென்ற அவர், வேலை முடியாததால் ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்துடன் ஊருக்கு காரில் திரும்பியது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் நரேந்திரனிடம் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கோபி ஆர்.டி.ஓ. அசோகனிடம் ஒப்படைத்தனர்.
சம்பந்தப்பட்ட நபர் உரிய ஆவணங்களை காட்டினால் அவரிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.
இதேபோல் விஜயமங்கலம்–ஊத்துக்குளி ரோட்டில் பெருந்துறை அருகே உள்ள வேட்டைக்காரன்கோவிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுந்தரவடிவேல் மற்றும் அதிகாரிகள் நேற்று மதியம் 2 மணி அளவில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ரூ.75 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பவானியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பதும், ஊத்துக்குளியில் வெடிமருந்தை விற்றுவிட்டு அதற்கான பணம் ரூ.75 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு ஊருக்கு சென்றதும் தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு பெருந்துறை தாசில்தார் துரைசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.