குடிநீர் கேட்டு கிராம மக்கள் மனு
ராமநாதபுரத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் மனுகொடுத்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் கற்காத்தகுடி அருகே உள்ள குருப்புளி, கவளக்கன்னி, கைக்குடி, இளங்குளம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திரளாக கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது:–
4 கிராமங்களிலும் கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் வசதி இல்லை. இதன்காரணமாக எங்கள் ஊரில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை 4 கிலோ மீட்டர் வரை நடந்துசென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். ரூ.10–க்கு நல்ல தண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். உழைக்கும் பணம் எல்லாம் தண்ணீருக்கே செலவிட்டு வருகிறோம்.
தற்போது எங்கள் பகுதியில் புதிதாக சாலை போடுவதால் இனி குழாய்கள் போட வழியில்லை. எனவே சாலை பணிகள் முடிவதற்குள் குழாய் அமைத்து குடிநீர் கொண்டுவர வேண்டும். இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. தண்ணீர் வராவிட்டால் தேர்தலை புறக்கணிப்பது உள்ளிட்ட முடிவுகளை எடுக்க வேண்டியது வரும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.