அன்னூரில் தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர் உள்பட 3 பேர் சாவு - போலீசார் தீவிர விசாரணை


அன்னூரில் தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர் உள்பட 3 பேர் சாவு - போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 19 March 2019 3:56 AM IST (Updated: 19 March 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

அன்னூரில் தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

அன்னூர்,

அன்னூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை- அன்னூர் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று இரவு 7 மணிக்கு 3 பேர் நடந்து சென்றனர். அப்போது அன்னூரில் இருந்து கோவை நோக்கி ஒரு வாகனம் வேகமாக வந்தது. திடீரென்று அந்த வாகனம் ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்ற 3 பேர் மீதும் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர்கள் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில் விபத்தில் உயிரிழந்தது அன்னூர் அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்த சம்பத்குமார் (வயது 45), மற்ற 2 வாலிபர்கள் பீகார் மாநிலம் சமஷ்திப்பூரை சேர்ந்த சந்தன் (25), தீபக் (16) என்பது தெரியவந்தது. சம்பத்குமார் பள்ளத்தோட்டம் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வந்தார். மற்ற 2 பேர் அவருடைய தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்து உள்ளனர்.

அவர்கள் 3 பேரும் சிறுமுகை சென்று விட்டு காரில் அன்னூர் வந்தனர். அங்கு வந்து காரை ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு எதிர்புறத்தில் உள்ள டீக்கடைக்கு சென்றபோது இந்த விபத்து நடந்து உள்ளது.

மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனம், நிற்காமல் உடனடியாக வேகமாக அங்கிருந்து சென்று விட்டது. அந்த வாகனத்துக்குள் எத்தனை பேர் இருந்தனர் என்பதும் தெரியவில்லை. போலீசார் இதுகுறித்து விபத்தை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் தெரிவித்த தகவலை வைத்து நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.

அதுபோன்று விபத்து நடந்த பகுதி அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் விபத்து பதிவாகி இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story