போலீஸ் காவல் முடிந்து திருநாவுக்கரசு மீண்டும் சிறையில் அடைப்பு - கூட்டாளிகள் 3 பேரை விசாரிக்க முடிவு


போலீஸ் காவல் முடிந்து திருநாவுக்கரசு மீண்டும் சிறையில் அடைப்பு - கூட்டாளிகள் 3 பேரை விசாரிக்க முடிவு
x
தினத்தந்தி 18 March 2019 11:30 PM GMT (Updated: 18 March 2019 10:47 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசின் போலீஸ் காவல் முடிந்து நேற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதைதொடர்ந்து திருநாவுக்கரசின் கூட்டாளிகள் 3 பேரை விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியை அடுத்த சின்னப்பம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 27) மற்றும் அவரது கூட்டாளிகளான சபரிராஜன்(25), சதீஷ்(29), வசந்தகுமார்(24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

போலீஸ் காவல் முடிந்து திருநாவுக்கரசை நேற்று காலை 8 மணியளவில் கோவை தலைமை குற்றவியல் நீதிபதி நாகராஜன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் திருநாவுக்கரசு கோவை சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரின் நீதிமன்ற காவல் இன்று(செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. எனவே அவரை இன்று கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் சட்டம்- ஒழுங்கு நிலைமையை காரணம் காட்டி காணொலி காட்சி மூலம் திருநாவுக்கரசின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திருநாவுக்கரசு பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு எம்.பி.ஏ. படித்து முடித்தேன். வட்டித் தொழில் மூலம் எனக்கு அதிக வருமானம் கிடைத்ததால் கல்லூரியில் படிக்கும் போது அதிகம் செலவு செய்தேன். படிப்பை முடித்ததும் எனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி மயக்கினேன். எங்கள் வலையில் விழும் பெண்களை சுற்றுலா செல்லலாம் என்று கூறி காரில் அழைத்து சென்று சின்னப்பம்பாளையத்தில் உள்ள வீட்டில் ஆபாச படம் எடுப்போம். அதை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்தோம். சில பெண்களுடன் உல்லாசம் அனுபவித்தோம்.

இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் சில மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தனர். ஆனால் பணம் கொடுத்து நாங்கள் அதில் இருந்து தப்பினோம். ஆனால் கடந்த மாதம் ஒரு கல்லூரி மாணவி அளித்த புகார் தான் எங்களை போலீசாரிடம் சிக்க வைத்து விட்டது. ஆனால் அதில் இருந்து தப்பிப்பதற்காக எனக்கும் அந்த பெண்ணுக்கும் தொடர்பு கிடையாது என்று கூறி ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பினேன். ஆனால் போலீசார் சரியான ஆதாரங்களுடன் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு வாக்குமூலத்தில் திருநாவுக்கரசு கூறியிருப்பதாக தெரிகிறது.

திருநாவுக்கரசின் கூட்டாளிகளில் ஒருவரான சபரிராஜன் பெண்களை மயக்குவதில் வல்லவர் என்று கூறப்படுகிறது. இவர் தான் பெரும்பாலான பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி மயக்கி அழைத்து வந்ததாக தெரிகிறது. எனவே சிறையிலிருக்கும் திருநாவுக்கரசின் கூட்டாளிகள் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தினால் தான் இந்த பாலியல் வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது? பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? என்பன போன்ற விவரங்கள் தெரியவரும். எனவே அவர்களை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருநாவுக்கரசின் கூட்டாளிகளிடம் விசாரணை நடத்தினால் இந்த பாலியல் வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளோம். இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ், ஒரு நபரை கைது செய்த பின்னர் 15 நாட்களுக்குள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். ஆனால் இவர்கள் 3 பேரையும் கைது செய்து 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே சென்னை ஐகோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற்று அவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனையும் நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story