திருப்பூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது - 35 பவுன் நகைகள் பறிமுதல்


திருப்பூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது - 35 பவுன் நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 March 2019 11:30 PM GMT (Updated: 18 March 2019 11:30 PM GMT)

திருப்பூரில் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள் பறிமுதல்செய்யப்பட்டது.

நல்லூர்,

திருப்பூர் மாநகரில் பகுதிகளில் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தன. குறிப்பாக வசதியானவர்கள் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை நோட்டமிட்டு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து இரவு நேரங்களில் வீடு புகுந்து நகை- பொருட்களை ஆசாமிகள் திருடி செல்வது தொடர்ந்து அரங்கேறி வந்தது.

இதனையடுத்து இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் படி, துணை கமிஷனர் உமா மேற்பார்வையில் தெற்கு உதவிக்கமிஷனர் நவீன்குமார், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தனிப்படை போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் குழுவை சேர்ந்த தலைமை காவலர்கள் காளிமுத்து, தங்கவேல், மாரி, உள்ளிட்ட போலீசார் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆசாமிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் காங்கேயம் ரோடு, அமர்ஜோதி கார்டன் அருகே தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திருப்பூர், காங்கேயம் ரோடு, அம்மன் நகரில் வசித்து வரும் முகம்மது ரபீக், (வயது24) பெரியத்தோட்டம், 8-வது வீதியில் வசித்து வரும் யாசர் அராபாத் (21) என்பது தெரியவந்தது.

இவர்கள் திருப்பூர் பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இவர்களின் கூட்டாளியான காங்கேயம் ரோடு, ரேணுகா நகரை சேர்ந்த அப்துல்லா மகன் முகம்மது அசாருதீன் (23) தெரியவந்தது. இவரை மணியகாரன்பாளையம் அருகே வந்து போது போலீசார் பிடித்தனர். முகம்மது அசாருதீனை விசாரித்ததில் இவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக கடலூர் மாவட்டம் வண்டிபாளையம் ரோடு, சிவா நகரை சேர்ந்த அன்பு மகன் முருகன் என்ற வண்டிபாளையம் முருகன் என்பவர் இருப்பது தெரியவந்தது. முருகனை ரகசியமாக போலீசார் தேடி வந்தனர்.

நேற்று திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஒரு ஓட்டல் பின்புற வீதியில் சென்று கொண்டிருக்கும் போது போலீசார் முருகனை மடக்கி பிடித்து விசாரித்தில் முருகன் பல ஊர்களில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவர் சேலம் சிறையில் இருக்கும் போது முகம்மது அசாருதீனிடம் பழக்கமாகியுள்ளார். பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் தொலைபேசி மூலம் முருகனை தொடர்புகொண்டு முகம்மது அசாருதீன் உதவி கேட்டுள்ளார்.

திருப்பூர் வந்த முருகன் மற்றும் 3 பேரும் சேர்ந்து திருப்பூர் சுற்றியுள்ள வசதியானவர்களின் வீடுகளை மோட்டார்சைக்கிளில் நோட்டமிட்டு இரவு நேரங்களில் 4 பேரும் சேர்ந்து கதவுகளை உடைத்து 3 பேர் உள்ளே சென்று திருடுவதும் ஒருவர் வெளியில் ஆட்கள் வருகிறார்களா? என பார்ப்பதற்கு நிற்க வைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

திருப்பூர் விஜயாபுரம் அருகே ஒரு வீட்டில் மற்றும் வி.வி.ஐ.பி. நகரில் உள்ள ஒரு வீடு, பூண்டி பகுதியில் 2 வீடுகளில் நகை, பணம், டி.வி., மடிக்கணினி மற்றும் வெள்ளி பொருட்கள் திருடியது தெரியவந்து. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள், 3 மடிக்கணினி மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story