சிறுவன் கடத்தி கொலை: உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டம்


சிறுவன் கடத்தி கொலை: உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 20 March 2019 4:45 AM IST (Updated: 19 March 2019 8:35 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட உறவினர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய கெபின்ராஜ் (வயது 35), மீனவர். இவரது மனைவி சகாய சிந்துஜா (33). இவர்களுடைய மகன் ரெய்னா(4). கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரெய்னாவை ஆரோக்கிய கெபின்ராஜின் தாய்மாமனான அந்தோணிசாமி (36) என்பவர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று தென்னந்தோப்பில் வைத்து தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். பின்னர் அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைதான அந்தோணிசாமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

ஆரோக்கியராஜ் எனது அக்கா மகன். அவர் என்னிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி கேட்கும்போதெல்லாம் காலம் கடத்தி வந்தார். இதனால் அவரின் மகனை கடத்த முடிவு செய்தேன். அப்போது வீட்டின்முன் எனது மகனும், ரெய்னாவும் விளையாடி கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் சிறுவன் ரெய்னாவை நான் எனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றேன். பின்னர், கீழமணக்குடி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து ரெய்னாவை கொலை செய்தேன். அதன்பிறகு கேரளாவுக்கு தப்பி சென்றேன். அங்கு என்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


இந்த வழக்கில் சிறுவனை கடத்தி சென்றது கன்னியாகுமரி போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதி ஆகும். ஆனால் கொலை நடந்தது தென்தாமரைகுளம் பகுதி ஆகும். இதனால் 2 போலீஸ் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்தால் குற்றவாளி வழக்கில் இருந்து தப்பித்து விடுவார் என்பதால் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு இதுகுறித்து துணைபோலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் விசாரணை நடத்தினர். அந்தோணிசாமியை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நீதிபதி அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பிறகு அந்தோணிசாமியை சிறையில் அடைத்தனர்.


இந்தநிலையில் சிறுவன் ரெய்னாவின் உடல் நேற்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின், உடலை வாகனத்தில் ஆரோக்கியபுரத்துக்கு கொண்டு சென்றனர்.

செல்லும் வழியில் உறவினர்கள் வாகனத்தை வழி மறித்து, உடலை இறக்க விடாமலும், அடக்கம் செய்ய மறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், குற்றவாளி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது. அந்தோணிசாமி, மனநலம் சரியில்லாதவர் என்று வதந்தி பரப்புவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த போராட்டம் சுமார் 3 மணி நேரம் நீடித்தது.


இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் ஆதம்அலி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பின்பு சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து ஆரோக்கியபுரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story