பிளஸ்-2 மாணவியை கடத்த முயன்ற 2 வாலிபர்கள் கைது காதலன் உள்பட 6 பேருக்கு போலீசார் வலைவீச்சு


பிளஸ்-2 மாணவியை கடத்த முயன்ற 2 வாலிபர்கள் கைது காதலன் உள்பட 6 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 March 2019 3:45 AM IST (Updated: 20 March 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

பாடாலூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்த முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய காதலன் உள்பட 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் வெங்கடேசன்(வயது 22). இவர் பாடாலூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்தார். அந்த மாணவியும் அவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் சேர்ந்து மாணவியை கடத்த திட்டமிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த மாணவி பிளஸ்-2 கடைசி தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் ஏறி செட்டிகுளம் வந்தார். செட்டிகுளத்தில் இறங்கி பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மாணவியின் தாய் அவரது பின்னால் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. அங்கு வெங்கடேசன் உள்பட 8 பேர் காத்திருந்தனர். அப்போது திடீரென வெங்கடேசன் மாணவியை கடத்தி செல்வதற்காக தன்னுடன் வருமாறு கையை பிடித்து இழுக்க முயன்றார். இதனை பார்த்த மாணவியின் தாயும், செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த தாமோதரன் மற்றும் பொதுமக்களும் மாணவியிடம் தகராறு செய்தது குறித்து தட்டி கேட்டனர்.

இதனால் அச்சமடைந்த வெங்கடேசன், மற்றும் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு தப்பி செல்ல முயன்றனர். அதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை தடுக்க முயன்றனர். இதில் தாமோதரனை வெங்கடேசன் உள்பட 8 பேரும் சேர்ந்து தாக்கி காயப்படுத்தினர். பின்னர் வெங்கடேசனின் நண்பர்கள் ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்(22), கருப்புசாமி(18) ஆகிய இருவரையும் பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். மற்ற 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து செட்டிகுளம் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் பிடித்து வைத்து இருந்த இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி சென்ற மற்ற 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story