வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து ஓய்வுபெற்ற நர்ஸ் கழுத்தை அறுத்து கொலை - 6 பவுன் நகையுடன் தப்பிய தம்பதிக்கு வலைவீச்சு
வாடகைக்கு வீடு கேட்பதுபோல் நடித்து ஓய்வு பெற்ற நர்சை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு 6 பவுன் நகையுடன் தப்பிய தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் விஜய்ஆனந்தன். இவருடைய மனைவி மேரிஏஞ்சலின் (வயது 70). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் வசித்து வருகிறார்கள். விஜய்ஆனந்தன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேரி ஏஞ்சலின் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அவர்கள் 2 பேரும் கோவை சவுரிபாளையத்தில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீடு அருகிலேயே உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் மேரிஏஞ்சலின் வீட்டு வந்து, தங்களை தம்பதி என்று கூறி வாடகைக்கு வீடு கேட்டுள்ளனர்.
அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு மீண்டும் வந்து மேரி ஏஞ்சலினிடம் வீட்டை பார்க்கவேண்டும் என கேட்டுள்ளனர். உடனே அவர் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை திறந்து காண்பிப்பதற்காக சென்றார்.
வெகுநேரமாகியும் மேரிஏஞ்சலின் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விஜய்ஆனந்தன் தனது மனைவியை தேடிச் சென்றார். அங்கு வீட்டுக்குள் மேரிஏஞ்சலின் கழுத்து அறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மேரிஏஞ்சலின் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்சங்கிலி, ஒரு பவுன்கம்மல் என 6 பவுன் நகைகள் கொள்ளையடிக் கப்பட்டு இருந்தது. அவர் வைத்திருந்த செல்போனையும் காணவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் மூலம் துப்புத்துலக்காமல் இருப்பதற்காக, கொலையாளிகள் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்று இருந்தனர்.
வீடு இருந்த வீதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் வீடு வாடகைக்கு கேட்ட தம்பதியின் உருவம் பதிவாகி உள்ளது. இதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து, ஓய்வு பெற்ற நர்சை கொலை செய்து விட்டு 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் கொலை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய் தனர்.
விஜய் ஆனந்தன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரால் சரியாக பேச முடியவில்லை. வீடு வாடகைக்கு கேட்டு வந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது அவருக்கு தெரியவில்லை.
இந்த கொலை குறித்து போலீஸ் துணை கமிஷனர் பெருமாள் கூறும் போது, கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப் பட்டு உள்ளன. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி போதுமான அளவு தெளிவாக இல்லை. ஆனாலும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த கொலையில் தொடர்புடைய ஆணும், பெண்ணும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்காநல்லூரில் தனியாக வசித்த மூதாட்டியை கொன்று ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்நிலையில் பீளமேட்டில் நர்சை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story