கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை கிலோ ரூ.30-க்கு விற்பனை


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை கிலோ ரூ.30-க்கு விற்பனை
x
தினத்தந்தி 19 March 2019 10:45 PM GMT (Updated: 19 March 2019 8:39 PM GMT)

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உத்தமபாளையம்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை விவசாயம் நடந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்திலேயே ஆண்டு முழுவதும் திராட்சை பழம் கிடைக்கும் இடமாக, கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விளங்குவது கூடுதல் சிறப்பு அம்சம் ஆகும்.

குறிப்பாக காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, ஆனைமலையன்பட்டி, க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி உள்ளிட்ட இடங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திராட்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்குள்ள தோட்டங்களில் கொத்துக் கொத்தாக திராட்சை பழங்கள் காய்த்து தொங்கி கொண்டிருக்கின்றன. மேலும் அறுவடை பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதன் எதிரொலியாக பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. அதன்படி திராட்சை பழங்களை கொள்முதல் செய்ய, வெளிமாவட்ட வியாபாரிகள் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முகாமிட்டுள்ளனர். கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் ஒரு கிலோ திராட்சை பழம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் தற்போது ஒரு கிலோ திராட்சை ரூ.30 முதல் ரூ.32 வரை விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேநேரத்தில் திராட்சை வரத்து குறைவாக உள்ளது. இதனால் மீண்டும் விலை உயர வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, மராட்டிய மாநிலத்தில் இருந்து மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விதையில்லா திராட்சை வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் கருப்பு திராட்சைக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்றனர். 

Next Story