உதவித்தொகை வாங்கி தருவதாக 3 பவுன் நகை பறிப்பு மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய ‘டிப்-டாப்’ பெண்ணுக்கு வலைவீச்சு


உதவித்தொகை வாங்கி தருவதாக 3 பவுன் நகை பறிப்பு மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய ‘டிப்-டாப்’ பெண்ணுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 March 2019 10:15 PM GMT (Updated: 19 March 2019 8:56 PM GMT)

மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி 3 பவுன் நகையை பறித்து சென்ற ‘டிப்-டாப்’ பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அழகியமண்டபம்,

இரணியல் அருகே நெய்யூர் கக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி கமலா (வயது 60). சம்பவத்தன்று மதியம் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது, 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ‘டிப்-டாப்’ ஆக உடை அணிந்து வந்தார்.

அவர், வருவாய்த்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், கமலாவுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாகவும் கூறினார். அதைகேட்டு கணவன்-மனைவி இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து அந்த பெண், அவர்களிடம் நெருங்கிய உறவினர் போல் அன்பாக பேசினார். அப்போது, கமலா அணிந்திருந்த 3 பவுன் தங்க வளையலை அந்த பெண் கேட்டு வாங்கினார். 2 நாட்களில் அதை தருவதாக கூறி விட்டு புறப்பட்டார். அதைத்தொடர்ந்து பிரபாகரன், அந்த பெண்ணை தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றி சென்று திங்கள் நகர் பஸ்நிலையத்தில் விட்டார்.

பின்னர், 2 நாட்களில் அந்த பெண் திரும்பி வருவார் என்று கணவன்-மனைவி இருவரும் காத்திருந்தனர். ஆனால், அந்த பெண் அதன்பிறகு வரவில்லை.

இதுபற்றி பிரபாகரன், இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரெனில் ஏசுபாதம் விசாரணை நடத்தி, மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி 3 பவுன் நகையை பறித்து சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story