தட்டாஞ்சாவடியில் இந்திய கம்யூனிஸ்டு போட்டியா? கட்சி தலைமையின் முடிவினை ஏற்க திட்டம்


தட்டாஞ்சாவடியில் இந்திய கம்யூனிஸ்டு போட்டியா? கட்சி தலைமையின் முடிவினை ஏற்க திட்டம்
x
தினத்தந்தி 20 March 2019 4:30 AM IST (Updated: 20 March 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி தலைமையின் முடிவினை ஏற்று செயல்படுவது என்று கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்– புதுவையில் காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஒரே கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். தி.மு.க. வேட்பாளராக தொழில் அதிபர் வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது இந்த தொகுதியில் மக்கள் நல கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சேதுசெல்வம் 2–வது இடத்தை பெற்றார். எனவே இந்த முறையும் இடைத்தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்டு விரும்புகிறது. ஆனால் அந்த கூட்டணியில் தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால் குழப்பமான நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களை சந்தித்து சமரசம் பேசினார்கள். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்தநிலையில் கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், அபிசேகம், கீதநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது இந்த இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கட்சியின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. கட்சி தலைமையின் முடிவு நாளை (வியாழக்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story