பெண்கள் பாதுகாப்புக்கு, மாவட்ட நிர்வாகம் பக்கபலமாக இருக்கும் காரைக்கால் கலெக்டர் விக்ராந்த்ராஜா உறுதி


பெண்கள் பாதுகாப்புக்கு, மாவட்ட நிர்வாகம் பக்கபலமாக இருக்கும் காரைக்கால் கலெக்டர் விக்ராந்த்ராஜா உறுதி
x
தினத்தந்தி 20 March 2019 4:00 AM IST (Updated: 20 March 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் பாதுகாப்புக்கு மாவட்ட நிர்வாகம் பக்கபலமாக இருக்கும் என்று கலெக்டர் விக்ராந்த் ராஜா கூறினார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட பெண்கள் பாதுகாப்புக்காக காவல் துறை சார்பில் தன்னார்வ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயல் பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் ஆல்வா தலைமை தாங்கினார். துணை கலெக்டர் பாஸ்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மாரிமுத்து, வீரவல்லவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூறினார். அப்போது அவர் பேசியதாவது:-

பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, ஈவ்டீசிங் மற்றும் செல்போனில் மிரட்டல் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நடந்தால், அவற்றை உடனடியாக களையும் நோக்கில் இந்த அமைப்பு செயல்படுவது பாராட்டத்தக்கது.

இந்த அமைப்பு தங்களுக்குள் ஒரு வாட்ஸ்அப் குழுவை ஏற்படுத்தவேண்டும். அதில் பெண்கள் பாதுகாப்பிற்கு பயனுள்ள செய்திகளை பகிர்ந்துகொள்ள வேண்டும். ஏதேனும் குற்றங்கள் நடந்தால் அதில் பதிவு செய்யலாம். இதுபற்றி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்.

இந்த அமைப்பினர் அந்தந்த காவல் நிலையங்களில் தாங்கள் தினசரி சந்தித்த வழக்குகள், சம்பவ இடத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள், மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்கு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் பக்கபலமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story