நெல்லை அருகே, டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.85 ஆயிரம் கொள்ளை - 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


நெல்லை அருகே, டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.85 ஆயிரம் கொள்ளை - 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 March 2019 9:45 PM GMT (Updated: 19 March 2019 10:24 PM GMT)

நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.85 ஆயிரத்தை கொள்ளை கும்பல் பறித்துச் சென்றது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 57). இவர் நெல்லை அருகே முன்னீர்பள்ளம் குபேரன் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையை முடித்து கடையை மூடினர்.

பின்னர் மது விற்ற பணம் ரூ.84 ஆயிரத்து 950-ஐ ஆறுமுகம் ஒரு பையில் போட்டு தனது மொபட் பெட்டியில் வைத்து பூட்டினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அவருக்கு பின்னால் அதே டாஸ்மாக் கடை ஊழியர் அய்யப்பன் (39) என்பவரும் தனியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

சிறிது தூரம் சென்ற போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று ஆறுமுகத்தை வழிமறித்து மோதியபடி நின்றனர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேரும் அரிவாள் மற்றும் கத்தியுடன் மொபட் பெட்டியை அரிவாளால் வெட்டி திறந்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு புறப்பட்டனர்.

அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஊழியர் அய்யப்பன், கொள்ளை கும்பலை தடுக்க முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் அரிவாளால் அய்யப்பன் தொடையில் வெட்டி விட்டு பணத்துடன் தப்பிச் சென்று விட்டனர்.

இதில் மொபட்டில் இருந்து கீழே விழுந்த ஆறுமுகம் மற்றும் அரிவாள் வெட்டு காயம் அடைந்த அய்யப்பன் ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story