நெல்லை போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீர் சாவு - உடலுக்கு அதிகாரிகள் மரியாதை


நெல்லை போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீர் சாவு - உடலுக்கு அதிகாரிகள் மரியாதை
x
தினத்தந்தி 20 March 2019 4:45 AM IST (Updated: 20 March 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

திடீரென்று இறந்த நெல்லையை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா உடலுக்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள சிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா. பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இவர், நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்குள்ள ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று பணிகளை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பணிமுடிந்து வீடு திரும்பிய அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர் தனியார் ஆஸ்பத்திரியிலும், அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நேற்று பிற்பகல் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், துணை கமிஷனர்கள் சாம்சன், பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் போலீஸ் அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் ராமையா உடல் இறுதி சடங்கு செய்வதற்காக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இறந்த ராமையாவுக்கு சரசுவதி என்ற மனைவியும், கதிர் என்ற மகனும் உள்ளனர்.


Next Story