விருதுநகரில் சில்லரை மண்எண்ணெய் வினியோக பிரச்சினைக்கு உரிய தீர்வு மாவட்ட வருவாய் அதிகாரி உறுதி


விருதுநகரில் சில்லரை மண்எண்ணெய் வினியோக பிரச்சினைக்கு உரிய தீர்வு மாவட்ட வருவாய் அதிகாரி உறுதி
x
தினத்தந்தி 19 March 2019 10:45 PM GMT (Updated: 19 March 2019 10:40 PM GMT)

விருதுநகரில் சில்லரை மண்எண்ணெய் வினியோகத்தில் உள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் தெரிவித்தார்.

விருதுநகர்,

விருதுநகர் தாலுகாவில் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு சில்லரை மண்எண்ணெய் வினியோகம் செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கிராமப்புறங்களில் ரே‌ஷன் கடைகள் மூலமும், விருதுநகரில் சில்லரை மண்எண்ணெய் வண்டிகள், மண்எண்ணெய் பங்க் மூலமும் மண்எண்ணெய் வினியோகம் செய்யப்பட்டுவருகிறது. மண்எண்ணெய் வண்டிகள் மூலம் வினியோகம் செய்ய எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சராக இருந்த போதே ஏழை, எளியவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நடைமுறையை ஏற்படுத்தினார். தற்போது வரை அந்த நடைமுறை தொடர்கிறது.

கடந்த ஆண்டுவரை விருதுநகர் பகுதியில் சில்லரை வினியோகத்திற்கான மண்எண்ணெய் விருதுநகரில் உள்ள மொத்த மண்எண்ணெய் வணிகம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தாண்டு தொடக்கத்தில் வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் திடீரென இந்த நடைமுறையில் மாற்றம் செய்தனர்.

அதன்படி விருதுநகரில் சில்லரை மண்எண்ணெய் வினியோகத்திற்கான மண்எண்ணெயை மண்எண்ணெய் வண்டிக்காரர்களும், மண்எண்ணெய் பங்க் நடத்தும் கூட்டுறவு சங்கத்தினரும் ராஜபாளையத்தில் உள்ள ஒரு மொத்த மண்எண்ணெய் வணிகத்தினரிடம் இருந்து பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ராஜபாளையத்திலுள்ள ஒரு தனியார் மண்எண்ணெய் வணிகரிடமிருந்து நடப்பு மாதத்திற்கு 29 ஆயிரத்து 175 லிட்டர் மண்எண்ணெய் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

சில்லரை மண்எண்ணெய் வண்டிக்காரர்கள் ராஜபாளையத்திற்கு சென்று மண்எண்ணெய் எடுத்து வருவதற்கு போக்குவரத்து செலவு அதிகம் ஏற்படுகிறது. இச்செலவினை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும், சில்லரை மண்எண்ணெய் வினியோகத்தினருக்கும் இடையே மண்எண்ணெய் வினியோகத்தின் போது தேவையற்ற பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது.

இப்பிரச்சினை குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் கேட்டபோது நடப்பு மாதத்திற்கு விருதுநகரிலேயே உள்ள மொத்த வணிகரிடமிருந்து மண்எண்ணெய் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். ஆனாலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமாரிடம் இப்பிரச்சினை குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது:–

சில்லரை மண்எண்ணெய் வண்டிக்காரர்கள் ராஜபாளையத்திற்கு சென்று வருவதில் பெரும் சிரமம் ஏற்படும் என்பது உண்மைதான். இதனால் ரே‌ஷன் கார்டுதாரருக்கும், சில்லரை மண்எண்ணெய் வண்டிக்காரருக்கும் இடையே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து இப்பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story