“வாரிசு அரசியலை கட்சிகள் ஊக்கப்படுத்துகின்றன” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
வாரிசு அரசியலை பல்வேறு அரசியல் கட்சிகள் ஊக்கப்படுத்துவதாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை,
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் தங்கள் மீதான குற்ற வழக்கு, கல்வித்தகுதி, சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை படிவம் 26–ல் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றாமல் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி இல்லாததால், வேட்புமனுக்கள் முறையாக பரிசீலிக்கப்படுவதில்லை. எனவே இதுகுறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தங்களின் வாக்குறுதிகளை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
ஆனால் தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சியை தவிர மற்ற கட்சிகள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து கோர்ட்டு நோட்டீசுக்கு பதில் அளிக்காத கட்சிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பல்வேறு கட்சிகள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், “அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப்பெற வேண்டும்“ என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். ஆனால், “அபராதம் விதிப்பதால், கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும்“ என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.
அதற்கு நீதிபதிகள், அப்படியானால், அந்த தொகையை நன்கொடையாக செலுத்துங்கள் என உத்தரவிட்டனர். பின்னர், “பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சிகளை தவிர பிற கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன. நம் நாட்டில் சில நூறு குடும்பங்கள் தான் அரசியலை நிர்ணயிக்கின்றன. இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சியா, மன்னர் ஆட்சியா அல்லது குடும்ப ஆட்சியா என தெரியவில்லை. மகாத்மா காந்தி, அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றவர்கள் வாரிசு அரசியலை பின்பற்றியிருந்தால், தற்போது யாரும் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. அண்ணாவின் வளர்ப்பு மகன் தற்கொலை செய்து கொண்டபோது, அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துபவர்கள் அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை“ என வருத்தம் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட தி.மு.க. வக்கீல் ஆஜராகி, “நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று (நேற்று) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் இதுபோன்ற கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தும்“ என தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “இது ஜனநாயக நாடு. தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா. யார் வேண்டுமானாலும் பேச உரிமை உண்டு“ என தெரிவித்தனர். மேலும், “நாடாளுமன்ற எம்.பி.க்கள் செழியன், மோகன்குமாரமங்கலம், சிதம்பரம், நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் மிகுந்த ஆங்கிலப்புலமையை பெற்றிருந்தனர். அவர்களை போல தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆங்கில அறிவு அவசியம்“ என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் சிங்காரவேலன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘அரசியல் கட்சிகள் இலவச பொருட்களை வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இலவச பொருட்கள் கட்சியின் நிதியிலிருந்து வழங்கப்படவில்லை. அரசின் பணத்திலிருந்தே வழங்கப்படுகிறது‘ என கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு தற்போதைய தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாதது என்பதால் இங்கு விசாரிக்கப்படுகிறது. அடுத்த விசாரணையின்போது, இந்த வழக்கில் அனைத்து கட்சிகளின் வாதத்தையும் முழுமையாக கேட்பதாக நீதிபதிகள் தெரிவித்து, விசாரணையை ஒத்திவைத்தனர்.