நாட்டிலேயே முதல் முறையாக தேர்தல் விழிப்புணர்வு தூதராக திருநங்கை நியமனம்


நாட்டிலேயே முதல் முறையாக தேர்தல் விழிப்புணர்வு தூதராக திருநங்கை நியமனம்
x
தினத்தந்தி 19 March 2019 11:03 PM GMT (Updated: 19 March 2019 11:03 PM GMT)

நாட்டிலேயே முதல் முறையாக தேர்தல் விழிப்புணர்வு தூதராக திருநங்கை ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மாநில தேர்தல் ஆணையம் வாக்குரிமை குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 12 பேரை தூதர்களாக நியமனம் செய்து உள்ளது.

அவர்கள் திருநங்கை கவுரி சாவந்த், அணு ஆராய்ச்சியாளர் அனில் காகோதர், விளையாட்டு துறையை சேர்ந்த ஸ்மிரிதி மந்தனா, விர்தவால் காடே, ராகி சமோபாத், லலித் பாபர், சினிமா மற்றும் டி.வி. நட்சத்திரங்களான மிரினால் குல்கர்னி, பிரசாந்த் தாம்லே, நிஷிகன்டா வாட், உஷா ஜாதவ், இலக்கிய ஆர்வலர் மதுமங்கேஷ் காமிக், மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் நிலேஷ் சிங்கித் ஆகியோர் ஆவா்.

இதில், 38 வயதான கவுரி சாவந்த் நாட்டிலேயே முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ள திருநங்கை தேர்தல் விழிப்புணர்வு தூதர் ஆவார். புனேயை சேர்ந்த பழமைவாத குடும்பத்தில் பிறந்த இவர், பல போராட்டத்துக்கு பிறகு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பாலியல் தொழிலாளி ஒருவரின் மகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.

தேர்தல் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கவுரி சாவந்த் கூறியதாவது:-

நாட்டிலேயே திருநங்கைகளில் நான் மட்டும் தேர்தல் விழிப்புணர்வு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாக உணர்கிறேன்.

பாலியல் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தலைவிகளிடம் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்து கூறுவேன். பாலியல் தொழிலாளர்களின் நலன் குறித்து எந்த கட்சியினரும் கவலைப்படுவதில்லை. எனவே பாலியல் தொழிலாளர்களும் தேர்தலில் ஓட்டுப்போடுவதை பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் அது மாற்றப்படவேண்டும்.

மேலும் குடும்ப தலைவிகளும் ஓட்டுப்போடுவதை தவிர்க்கின்றனர். அவர்களை பொறுத்தவரை வாக்குப்பதிவு நாள் ஒரு விடுமுறை நாள். அவர்களின் கணவர்மார்கள் வீட்டில் இருக்கும் நாள். எனவே அவர்கள் அன்று கணவர் மற்றும் பிள்ளைகளுக்காக சமையல் செய்வதில் மும்முரமாக உள்ளனர். ஓட்டுப்போட வெளியே வருவதில்லை. நான் அவர்களிடம் விழுப்புணர்வை ஏற்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டியத்தில் தற்போது 2 ஆயிரத்து 86 திருநங்கை வாக்காளர்கள் உள்ளனர். 2012-ம் ஆண்டு வரை மாநிலத்தில் ஒருவர் கூட திருநங்கை வாக்காளர்களாக பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story