பாலியல் வன்கொடுமையை கண்டித்து, பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
பாலியல் வன்கொடுமையை கண்டித்து பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து இந்து முன்னணி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் வெளியாவதை தடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், குணா, மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், அண்ணாதுரை, மாநில பேச்சாளர் மூகாமிகை மணி, இந்து அன்னையர் முன்னணி திருப்பூர் மாவட்ட தலைவி நிர்மலா, கோவை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் ரவி நன்றி கூறினார். முன்னதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை கிட்டதட்ட ஒரு மாதமாக பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அரசியலாக்கி கொண்டு இருக்கின்றனர். குறிப்பாக நக்சலைட் அமைப்பை சார்ந்தவர்கள் இதை செய்து வருகின்றனர். இது பாதிக்கப்பட்டவர்களை மேலும் வேதனை அடைய வைக்கிறது. ஆகவே அவர்களை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிடுவதை இந்து முன்னணி கண்டிக்கிறது. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்க வேண்டும். நமது கலாசாரத்தை, பண்பாட்டை பாதுகாக்க கல்வியை மாற்ற வேண்டும். கல்வியில் ராமாயணம், மகாபாரதம், நீதிபோதனை கதைகளை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் வருகிற காலங்களில் இன்னும் மோசமான ஒரு வக்ரபுத்தி உள்ள சூழ்நிலை உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story