கூடலூர்-ஓவேலி சாலையில், காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுயானை - சிகிச்சை அளிக்க வனத்துறைக்கு கோரிக்கை


கூடலூர்-ஓவேலி சாலையில், காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுயானை - சிகிச்சை அளிக்க வனத்துறைக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 20 March 2019 10:45 PM GMT (Updated: 20 March 2019 6:15 PM GMT)

கூடலூர்-ஓவேலி சாலையில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுயானையை பிடித்து, உரிய சிகிச்சை அளிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கூடலூர்,

வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், கூடலூர் பகுதிக்குள் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து வருகின்றன. அவை விவசாய பயிர்களை தின்று, சேதப்படுத்தி அட்டகாசம் செய்கின்றன. மேலும் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிடுகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது.

கடந்த சில வாரங்களாக கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி, போலீஸ் சோதனைச்சாவடி, கெவிப்பாரா உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் காட்டுயானை ஒன்று சுற்றித்திரிகிறது. சமீபத்தில் ஓவேலி சோதனைச்சாவடியை நள்ளிரவில் அந்த காட்டுயானை கடந்து சென்றது. இதனால் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், வனத்துறையினர் பீதி அடைந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் கூடலூர்-ஓவேலி சாலையில் அந்த காட்டுயானை நடந்து வந்தது. பின்னர் வனத்துறை சோதனைச்சாவடி அருகில் அரை மணி நேரம் முகாமிட்டது. இதை அறிந்து வந்த கெவிப்பாரா பகுதி மக்கள் காட்டுயானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டுயானை அங்கிருந்து செல்லவில்லை. பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதுகுறித்து கெவிப்பாரா பகுதி மக்கள் கூறிய தாவது:-

கூடலூர்- ஓவேலி சாலையில் 2 நீளமான தந்தங்களை கொண்ட காட்டுயானை ஒன்று இரவில் சுற்றித்திரிந்து வருகிறது. இதனை வனத்துறையினர் உதவியுடன் துரத்தினாலும், எந்த பலனும் ஏற்பட வில்லை. காட்டுயானையின் வால் பகுதியில் பலத்த காயம் உள்ளது. இது சம்பந்தமாக வனத்துறையினரிடம் தெரிவித்தால், அதை குணப்படுத்த முடியாது என்று அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். நீண்ட காலமாக காட்டுயானைக்கு அந்த காயம் இருப்பதாக தெரிகிறது.

எனவே அதனை பிடித்து, உரிய சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வலியால் அவதிப்பட்டு வரும் காட்டுயானை மக்களை தாக்கும் அபாயம் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோன்று குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள கே.என்.ஆர். நகரின் வனப்பகுதியில் 7 காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இவை நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை கடந்து சென்றன.
இதனால் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த காட்டுயானைகளை கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story