முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி மாணவி பலி தோழியின் தங்கையை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்


முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி மாணவி பலி தோழியின் தங்கையை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 21 March 2019 3:45 AM IST (Updated: 21 March 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய தோழியின் தங்கையை காப்பாற்ற முயன்ற மாணவி, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

ஜீயபுரம்,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பட்டாணி தெருவை சேர்ந்தவர் ரபீக். இவருடைய மனைவி செரின்பேகம், மகள் பைரோஸ்பானு(வயது 17). ரபீக் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பைரோஸ்பானு திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள தன்னுடைய பெரியம்மா சர்மிளா பானு வீட்டில் தங்கி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார். நேற்று முன்தினம் நடந்த கடைசி தேர்வை அவர் எழுதினார்.

இந்நிலையில் பைரோஸ்பானுவை ஒரத்தநாடு அழைத்து செல்வதற்காக செரின்பேகம், சர்மிளாபானு வீட்டிற்கு வந்தார். நேற்று காலை செரின்பேகம், பைரோஸ்பானு, சர்மிளாபானுவின் குடும்பத்தினர் மற்றும் பைரோஸ்பானுவின் பள்ளி தோழியான தென்னூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அயூப் முகமதுவின் மகள் கன்சூல்மகரிப்பானுவின்(17) குடும்பத்தினர் என மொத்தம் 14 பேர் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு வந்தனர்.

அங்கு அவர்கள் பல்வேறு இடங்களில் சுற்றி விட்டு, மதியம் காவிரி ஆற்றில் குளிக்க முடிவு செய்தனர். காவிரி பாலத்தில் முதல் மதகில் தண்ணீர் இல்லாததால், அவர்கள் இரண்டாவது மதகு பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது கன்சூல் மகரிப் பானுவின் தங்கை முபசீரா, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த கன்சூல்மகரிப்பானு மற்றும் பைரோஸ்பானு ஆகியோர் முபசீராவை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நீச்சல் தெரியாததால் அவர்களும் தண்ணீரில் மூழ்கினார்கள்.

இதை பார்த்த மற்றவர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அங்கு மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடிவந்து, தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் மீட்டனர்.

இதில் ஆபத்தான நிலையில் இருந்த பைரோஸ்பானு, கன்சூல்மகரிப் பானு ஆகியோரை, முக்கொம்பு பாசன ஆய்வாளர் சுந்தரபாண்டியன் மற்றும் பணியாளர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிக்கொண்டு, அருகில் உள்ள அந்தநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர் சுபா, பைரோஸ்பானுவை பரிசோதனை செய்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். கன்சூல்மகரிப் பானுக்கு அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார், பைரோஸ்பானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு வந்த மாணவி, காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story