திருச்செங்கோட்டில் நகை மோசடி வழக்கில் 2 பேர் கைது - ஒரு கிலோ 24 கிராம் தங்கம் மீட்பு


திருச்செங்கோட்டில் நகை மோசடி வழக்கில் 2 பேர் கைது - ஒரு கிலோ 24 கிராம் தங்கம் மீட்பு
x
தினத்தந்தி 20 March 2019 10:30 PM GMT (Updated: 20 March 2019 8:46 PM GMT)

திருச்செங்கோட்டில் நகை மோசடி வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்செங்கோடு,

திருச்செங்கோட்டில், நகை மோசடி வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு கிலோ 24 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திருச்செங்கோடு நகரில் நகைக்கடை வைத்து தொழில் செய்து வருபவர் பாரத் (வயது 28). இவர் திருச்செங்கோடு டவுன் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற குமார் (41) என்பவர் என்னிடம் வடிவமைக்கப்பட்ட தங்க நகைகளை வாங்கி சென்று வெளியூர்களில் விற்று பணம் கொண்டு வந்து தருவார். கடந்த பிப்ரவரி மாதம் 800 கிராம் (100 பவுன்) தங்க நகைகளை பெற்று விற்பதற்கு கொண்டு சென்ற பாலமுருகன் திரும்ப வரவில்லை. பணமும் தரவில்லை.

கடந்த 7-ந்தேதி கூட்டப்பள்ளியில் உள்ள அவருடைய வீட்டுக்கு சென்று கேட்டபோது நகையை தர முடியாது, பணமும் தரமுடியாது, மீறி கேட்டால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி இருந்தார்.

இந்த மோசடி குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் விசாரணை நடத்தி பாலமுருகனை தேடிச்சென்றபோது அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின்படி, திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

நேற்று கூட்டப்பள்ளி பஸ்நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பாலமுருகனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, நகைக்கடை உரிமையாளர் பாரத் உள்பட 18 பேரிடம் தங்க நகைகள் கிலோ கணக்கிலும், ரொக்கமாக ரூ.60 லட்சம் வரையிலும் நம்பிக்கையின் அடிப்படையில் பெற்று மோசடி செய்துள்ளதை பாலமுருகன் ஒப்புக்கொண்டார். அவருக்கு மோசடியில் உடந்தையாக இருந்த பாலமுருகனின் உறவினர் பவானியை சேர்ந்த அருண்குமார் (28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இருவரும் கொடுத்த தகவலின்பேரில் ஒரு தனியார் வங்கியில் அடமானமாக வைக்கப்பட்டு இருந்த (மோசடி செய்த நகைகள்) ஒரு கிலோ 24 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட பாலமுருகன், அருண்குமார் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story