கடலூர் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு, பாலியல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகிய வாலிபர் மீது சரமாரி தாக்குதல் - 3 மகள்களுடன் தாய் கைது


கடலூர் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு, பாலியல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகிய வாலிபர் மீது சரமாரி தாக்குதல் - 3 மகள்களுடன் தாய் கைது
x
தினத்தந்தி 20 March 2019 10:45 PM GMT (Updated: 20 March 2019 9:05 PM GMT)

பாலியல் வழக்கில் விசாரணைக்கு கடலூர் கோர்ட்டில் ஆஜராகிய வாலிபர் சரமாரியாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக 3 மகள்களுடன் தாய் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர்,

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் சையத்சத்தார். இவரது மகன் பாபு என்கிற சையத்பாபு (வயது 35). இவர் கடந்த 2014-ம் ஆண்டு சேலம் பகுதியை சேர்ந்த பெண் வக்கீல் ஒருவரின் 14 வயதுடைய மகளை அவரது பெற்றோர் சம்மதத்தின்பேரில் திருமணம் செய்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் சமூக நலத்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே பாபு, அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் தெரிகிறது.

இது பற்றி சிறுமி சார்பில் விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் குழந்தைகள் பாலியல் தொல்லை பாதுகாப்பு சட்டம், குழந்தைகள் திருமண தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் பாபு உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதற்காக பாபு மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுமியின் தாய், சிறுமியின் 13 மற்றும் 16 வயதுடைய சகோதரிகள் வந்தனர். விசாரணை முடிந்ததும் கோர்ட்டு அறையை விட்டு சிறுமியின் தாய், தனது 3 மகள்களுடன் வெளியே வந்தார். அதே நேரத்தில் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பாபுவை, தனது 3 மகள்களுடன் சேர்ந்து தாய் சரமாரியாக தாக்கினார். இதில் வலி தாங்க முடியாமல் அலறிய பாபு, அங்கிருந்து நீதிபதி அறைக்குள் சென்று பதுங்கி கொண்டார்.

இதற்கிடையில் அவர்கள் 4 பேரையும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மற்றும் வக்கீல்கள் பிடித்து புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் காயமடைந்த பாபு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இது தொடர்பாக பாபு, கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகள் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

கோர்ட்டு வளாகத்திற்குள் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story