100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று திருவள்ளூர் கலெக்டர் தெரிவித்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணை வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆவின் பால்பொருட்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி அதை விற்பனைக்கு எடுத்து செல்லும் பணி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:–
ஆவின் பால் சம்பந்தப்பட்ட பொருட்களான நெய், பால்பவுடர், பால்கோவா, மில்க்ஷேக் ஆகிய பொருட்களில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும், அது அவர்களது கடமை என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி அதை விற்பனை செய்யும் பணியை தொடங்கி வைத்து உள்ளேன்.
மேலும் ஆவின் பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்களிலும் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. தேர்தலில் தவறாமல் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
ஆவின் பால்பண்ணை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் விளம்பர வாகனம் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் விழிப்புணர்வு குறும்படங்கள் மூலம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து படக்காட்சிகள் காண்பிக்கப்பட உள்ளது. இதனை கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜெயக்குமார், திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.