தேர்தலையொட்டி கட்சி கொடிகம்பங்கள் அகற்றும்பணி தீவிரம் அதிகாரிகள் நடவடிக்கை


தேர்தலையொட்டி கட்சி கொடிகம்பங்கள் அகற்றும்பணி தீவிரம் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 21 March 2019 4:30 AM IST (Updated: 21 March 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலையொட்டி படப்பை பகுதியில் கட்சி கொடி கம்பங்களை அகற்றும்பணி அதிகாரிகள் தலைமையில் தீவிரமாக நடந்து வருகிறது.

படப்பை,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் மூலம் சுவர்களில் வரையப்பட்ட கட்சி சின்னம், விளம்பரங்கள், கொடிகள், கொடி கம்பங்கள் ஆகியவற்றை அகற்ற மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டும், கொடிகள், கொடி கம்பங்கள் அகற்றப்பட்டும் வருகிறது.

இந்தநிலையில் படப்பை அடுத்த வைப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சுவாஞ்சேரி பகுதியில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் 80 அடி உயர தி.மு.க. கொடி கம்பத்தை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து கொடிகம்பம் அகற்றப்படாமல் இருந்ததால் வருவாய் ஆய்வாளர் இந்திராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரபாபு, சாய்கிருஷ்ணன், மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் கிரேன் எந்திரம் மூலம் 80 அடி உயர கொடிக்கம்பத்தை 4 மணி நேரம் போராடி அகற்றினர்.

கொடிகம்பத்தை அகற்றுவதற்கு முன்பு அப்பகுதியில் விபத்து ஏற்படாமல் இருக்க மின்வினியோகம் நிறுத்தப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். கொடிகம்பத்தை அகற்றிய பின்னர் அப்பகுதி முழுவதும் மின் வினியோகம் வழங்கப்பட்டது. இதேபோல் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்தை சரி செய்து, மாற்றுப்பாதையில் வாகனங்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story