முள்ளிமுனை கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


முள்ளிமுனை கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 March 2019 10:15 PM GMT (Updated: 20 March 2019 9:54 PM GMT)

முள்ளிமுனை கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொண்டி,

திருவாடானை யூனியன், முள்ளிமுனை கடற்கரை கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கடற்கரை சாலை கடல் சீற்றத்தால் முற்றிலும் சேதமடைந்து விட்டது. மேலும் இங்கு நாளுக்குநாள் கடல் நீர் ஊருக்குள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மழை, புயல் காலங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்து மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் அபாய நிலை இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சமீபத்தில் ஏற்பட்ட புயலின்போது இந்த கிராமத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பல வீடுகள் சேதமடைந்தன. இதில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற கடற்கரையில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

இதன் காரணமாக இப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடயாக கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story