சொத்து பிரச்சினையில் மனைவி வெட்டி கொலை கணவர் கோர்ட்டில் சரண்
காளையார்கோவில் அருகே சொத்து பிரச்சினையில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கோர்ட்டில் சரணடைந்தார்.
காளையார்கோவில்,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது நென்மேனி கிராம். இந்த ஊரை சேர்ந்தவர் காசி என்ற வாத்து (வயது 60). இவர் சென்னையில் கறிக்கடை வைத்துள்ளார். மேலும் அங்கு சொந்தமாக வீடு கட்டி மனைவி பாண்டியம்மாள்(55), மகன்கள் பூவலிங்கம், மாரிமுத்து ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் சென்னையில் சொந்தமாக கட்டிய வீட்டை காசி விற்க முயற்சி செய்தாராம். இதையறிந்த மனைவி மற்றும் மகன்கள் வீட்டை விற்க கூடாது என்று கூறியதை தொடர்ந்து அவர்களுக்குள் சொத்து பிரச்சினை இருந்து வந்தது. மேலும் இதுதொடர்பாக காசி அடிக்கடி மனைவி மற்றும் மகன்களுடன் சண்டை போட்டு வந்தாராம்.
இந்தநிலையில் காசி மனைவியுடன் சொந்த ஊரான நென்மேனி கிராமத்திற்கு வந்தார். அங்கு அவர்களுக்குள் மீண்டும் சொத்து பிரச்சினை குறித்து தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த காசி மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தலைமறைவானார். அதில் பலத்த காயமடைந்த பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த காளையார் கோவில் சப்–இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான காசியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இளையான்குடி கோர்ட்டில் காசி சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.