வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு 2 பேர் கைது; எந்திரங்கள் பறிமுதல்


வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு 2 பேர் கைது; எந்திரங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 March 2019 10:30 PM GMT (Updated: 20 March 2019 10:13 PM GMT)

சோழவந்தான் பகுதி வைகை ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. இதனை அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் ஆறு பாழ்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சோழவந்தான்,

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாய்கிறது. மதுரை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் வைகை ஆறு முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லாததால் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லை. அவ்வப்போது பெய்யும் மழையின் போது மட்டும் ஆற்றில் சிறிதளவு தண்ணீர் செல்லும். இந்தநிலையில் ஆற்றில் மணல் திருட்டு என்பது அதிக அளவு நடைபெற்று வருகிறது. இதனால் ஆற்றின் போக்கும் மாறிவிட்டது. நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மதுரை சோழவந்தான் பகுதி வைகை ஆற்றில் இரவு, பகலாக மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் ஆற்றில் பெரிய அளவிலான பள்ளங்கள் உருவாகி பாழ்பட்டு வருகிறது. மணல் கொள்ளையை தடுக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் தாராளமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. எனவே மணல் திருட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே சோழவந்தான் அணைப்பட்டியில் இருந்து துவரிமான் வரை வைகை ஆற்று பகுதியில் இரவு, பகலாக மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் ஆலோசனையின் பேரில் சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் விஜய் மற்றும் போலீசார் சோழவந்தானில் இருந்து தேனூர் வரை வைகை ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சோழவந்தான் ஆர்.எம்.எஸ்.காலனி எதிரில் உள்ள வைகை ஆற்றில் சிலர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இதனை பார்த்த போலீசார் மணல் கொள்ளையர்களை பிடிக்க சென்றனர். அப்போது அவர்களில் சிலர் தப்பியோடிவிட்டனர். இருப்பினும் லாரி டிரைவர்கள் ரங்கராஜூ(வயது 31), முத்துக்குமார்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய 2 பொக்லைன் எந்திரங்களை பறிமுதல் செய்து, தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவந்தான் போலீசார் ரோந்து பணியின்போது மணல் திருடிய 2 பேரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அப்பகுதியில் மணல் கொள்ளை தாராளமாக நடைபெற்று வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

Next Story