சிவகிரி அருகே வீடுகளின் மீது திடீர் திடீரென விழும் கற்கள் கிராமமக்கள் அச்சம்
சிவகிரி அருகே வீடுகளின் மீது திடீர் திடீரென கற்கள் விழுவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.
சிவகிரி,
சிவகிரி அருகே உள்ள பேயாங்காட்டுவலசு கிராமத்தில் 20–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சிமெண்டு ஓட்டு வீடுகள் அதிக அளவில் உள்ளன. இந்தநிலையில் கடந்த 18–ந் தேதி இரவு 7.30 மணி அளவில் அந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பாலசுப்பிரமணி, தங்கமுத்து, சந்திரசேகர் ஆகியோர் உள்பட உள்ள சுமார் 7 பேர் வீடுகள் மீது கற்கள் வந்து விழும் சத்தம் கேட்டது. தொடர்ச்சியாக கற்கள் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வெளியே ஓடிவந்து பார்த்தார்கள். யாரையும் காணவில்லை. ஓடுகளின் மீது வீசப்பட்ட கற்கள் கிடந்தன.
யாராவது மர்மநபர்கள் ஒழிந்துகொண்டு கற்களை வீசுகிறார்களா? என்று கிராமம் முழுவதையும் மக்கள் சுற்றிவந்து தேடிப்பார்த்தார்கள். ஆனால் சந்தேகப்படும் வகையில் யாரும் நடமாடவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் மீண்டும் வீடுகளின் மீது கற்கள் வீசப்பட்டன.
காலை நேரம் என்பதால் எப்படியும் கற்களை வீசிய மர்ம நபர்களை பிடித்துவிடலாம் என்று வீடுகளில் இருந்து மக்கள் வெளியே ஓடிவந்து பார்த்தார்கள். ஆனாலும் யாரும் தென்படவில்லை. இதனால் புரியாத புதிராக கிராம மக்கள் அச்சம் அடைந்தார்கள்.
இதற்கிடைய நேற்று காலை யாராவது கல் வீசுவார்கள்? என்று கிராமமக்கள் காத்திருந்தார்கள். ஆனால் கற்கள் வீசப்படவில்லை. இதுகுறித்து பேயாங்காட்டுவலசு கிராமமக்கள் கூறும்போது, ‘திடீர் திடீரென கற்கள் வந்து ஓடுகளின் மீது விழுகின்றன. ஆனால் யார் வீசுகிறார்கள்? என்று தெரியவில்லை. பல ஓடுகள் உடைந்து விட்டன. எனவே சிவகிரி போலீசார் எங்கள் பகுதியில் ரோந்து வந்து, வீடுகளின் மீது கற்களை வீசுபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்கள்.