சேலத்தில் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள், பணம் திருட்டு - 3 சிறுவர்கள் கைது


சேலத்தில் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள், பணம் திருட்டு - 3 சிறுவர்கள் கைது
x
தினத்தந்தி 21 March 2019 3:57 AM IST (Updated: 21 March 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள், பணம் திருடிய 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் அன்னதானப்பட்டி புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் துரை (வயது 49). இவர் சேலம் குகை சிவனா தெருவில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 18-ந் தேதி இரவு வேலை முடிந்து மதுபான கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

பின்னர் 19-ந் தேதி கடைக்கு வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கடைக்குள் சென்று பார்த்த போது, அங்கு அட்டை பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த பீர், பிராந்தி, ரம் என மொத்தம் 52 மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ.640 திருட்டு போய் இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து அவர் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபான பாட்டில்களை திருடி சென்றவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 14, 15 மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் மதுபாட்டில்கள் மற்றும் பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையொட்டி 3 சிறுவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து மதுபான பாட்டில்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு 3 பேரையும் சேலம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.


Next Story