தார்வாரில், புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு


தார்வாரில், புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு
x
தினத்தந்தி 21 March 2019 4:10 AM IST (Updated: 21 March 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

தார்வாரில், புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது.

பெங்களூரு, 

கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக தனியார் வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த வணிக வளாக கட்டிடம் 5 மாடிகளை கொண்டது ஆகும். அந்த கட்டிடத்தின் பணிகள் வேகமாக நடந்து வந்தன. இதில் தரை தளம் மற்றும் முதல் மாடி கட்டிட பணிகள் முடிந்து அங்கு பல கடைகள் இயங்கி வந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த வணிக வளாகத்தின் கட்டிட பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் பெண்களும் அடங்குவர். மேலும் அந்த வளாகத்தில் உள்ள கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 4 மணியளவில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் அந்த கட்டிடத்தில் இருந்த வாடிக்கையாளர்கள், கடைகளின் ஊழியர்கள், மேலும் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் கதி என்ன? என்று தெரியாமல் இருந்தது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி போலீசார், தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அனைவரும் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கட்டிட இடிபாடுகளை அகற்ற பொக்லைன் எந்திரங்கள், கியாஸ் கட்டர்கள் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டன.

40-க்கும் மேற்பட்டோரை கட்டிட இடிபாடுகளில் இருந்து தீயணைப்பு படையினரும், மீட்பு குழுவினரும் மீட்டுள்ளனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் இறந்திருந்தனர்.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

அவர்கள் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

இதுபற்றி மாவட்ட பொறுப்பு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறியதாவது:-

கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் நிறைவடைந்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும். இந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story